செவ்வாய், 15 செப்டம்பர், 2015

சொல்லாமலே புயல் ஒன்று மையம் கொள்கிறது

வத்சலாவின் வாழ்க்கையில் இனி எந்தவிதமான மகிழ்ச்சிக்கும் இடமே இல்லை என்றாகி ரொம்ப நாளாகி விட்டது. அவளின் அப்பா வெறும் டம்மி பீஸ். அம்மா ராசலட்சிமியோ  திமிர் பிடித்த சர்வாதிகாரி. வத்சலாவின் கல்யாண பேச்சு வார்த்தைகள் எல்லாம் ராசலட்சிமி அம்மாவின்  சதுரங்க வேட்டை களமானது தான் மிச்சம், அவன்ரை படிப்பு காணாது இவன்ரை உத்தியோகம் சரியில்லை .இதொன்றும் இல்லையென்றால் அவனது குடும்ப பாரம்பரியம் சரியில்லை என்று ஏதாவது ஒரு காரணத்தை சொல்லியே தட்டி கொட்டி கொண்டே வத்சலாவின் வாழ்க்கையையே குட்டி சுவராக்கி விட்டாள்.
ராசலட்சுமியை எதிர்க்க அந்த வீட்டில் ஆளே இல்லாமல் போய்விட்டது.
வத்சலாவின் இரண்டு அக்காக்களும் அதிஷ்டவசமாக இளமையிலேயே கல்யாணம் செய்து ராசலட்சுமியின் பார்வையில் இருந்து வெகு தூரம் சென்று விட்டனர்.இருந்த ஒரே ஒரு சகோதரன்  குமாரும்  பலவருஷங்களாக அகதியாகி பலநாடுகளுக்கும் மாறி மாறி அலைந்து கொண்டிருந்தான், இவனது அலைச்சலில் சுமார்  பதினைந்து ஆண்டுகள் ஓடி போய்விட்டிருந்தது
.குமாரின் நண்பர் குழாத்தில் மகான் என்றொரு இளையவனும்  இருந்தான். பெயருக்கு ஏற்றபடியே கொஞ்சம் நல்லவன்.  அவன் பல ஆண்டுகளுக்கு பின்பு ஒருமாதிரி கடன் பட்டு ஊருக்கு செல்ல முடிவெடுத்தான். அவனது நல்ல காலமோ கெட்டகாலமோ தெரியவில்லை, குமாரிடம் கொஞ்சம் கடன் கேட்டான், குமாரும் உடனே கேட்ட காசை கொடுத்தான், அதன் பின் அவன் ஒரு கோரிக்கையும் வைத்தான்.
வத்சலாவின் விபரத்தை கூறி  ஏதாவது நல்ல மாப்பிள்ளை இருந்தால் பார்த்து எப்படியாவது அம்மா ராசலட்சுமியிடம் பேசும்படி கேட்டான். இது ஒன்றும் பெரிய காரியமாக மகானுக்கு தோன்றவில்லை மிகவும் சுலபமாக செய்ய கூடிய காரியமாக எண்ணினான். பாவம் அவனுக்கு ராசலட்சுமியை பற்றி தெரியாது,
குமார் விமான நிலயத்தில் வைத்து மகானின் கைகளை பிடித்து  உன்னை நம்பித்தான் இருக்கிறேன். இனி  வத்சலாவுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றான்.
2 . மகான் ஊரில் இருந்த ராசலட்சுமியின் வீட்டுக்கு தயங்கி தயங்கி சென்றான். அவன் தயங்குவதற்கு ஏராளமான காரணங்கள் இருந்தன, முதலில் அவன் வயதில் சிறியவன். இந்த மாதிரி விடயங்கள் பேசுவதற்கு கொஞ்சம் வயதும் அதிகமாக இருக்கவேண்டும் அல்லவா? போதாக்குறைக்கு ராசலட்சுமி ஒரு ஒய்வு பெற்ற கல்லுரி அதிபர்.
வயதை விட வேறொரு விடயம் அவனை கொஞ்சம் பயமுறுத்தியது, சாதியில் ராசலட்சுமி வீட்டார் கொஞ்சம் உயரத்தில் இருப்பதை அறிந்தான். அவனுக்கு கொஞ்சம் உதறல் எடுத்தது. குமார் பழகிய விதத்தில் மிகவும் சகஜமாக இருந்ததால் அவன் இதைபற்றி யோசிக்கவில்லை. ஆனால் ஊரில் நிலைமை வேறு, அந்த அம்மா வேறு  திமிர் பிடிச்ச கிழவி என்று அறிந்ததும் அவனுக்கு இருந்த தன்னம்பிக்கை பார்ட் பார்ட்டாக கழன்று கொண்டிருந்தது,
குமாருக்கு கொடுத்த வாக்கு ஒரு புறமும், அவன்  கூறிய வார்த்தைகளில் இருந்த பாரமும் சேர்ந்து ஒருமாதிரி ராசலட்சுமி வீட்டுக்கு மகானை தள்ளி கொண்டு சென்றுவிட்டது.
கிழவி எழுந்த மானத்திலே ஒரு தூசியை பார்ப்பது போல மகானை பார்த்து தம்பிக்கு எந்த ஊர் என்று கேட்டாள்.
வேறு என்னனவோ கேட்டால் குமாரை பற்றியும் ஏராளமான அர்ச்சனைகள் செய்தாள் . நீயும் அவனும் அங்கு கூலி வேலையா செய்கிறீர்கள் என்று கேட்டாள்.
கிழவியின் விசாரிப்புகள் மரியாதைகளில் மனம் தடுமாறி ஏன் இந்த கிழவி எந்த பண்பும் இல்லாமல் பேசுகிறார் என்று யோசித்தான்.
அவன் யோசித்ததை கண்டு பிடித்த கிழவி தானே அதற்கு பதிலும் சொல்வது போல், தம்பி உன்னைபார்த்தால் நல்ல குடியில் வந்தமாதிரி தெரியுது, இவன் குமார் கண்ட கண்ட சாதியோட எல்லாம் சகவாசம் வச்சு திரிவான் சொல்வழி கேட்கமாட்டான் என்றெல்லாம் பொழிஞ்சு தள்ளி கொண்டே இருந்தாள்.
வீடு மிகவும் பழைய காலத்து பெரிய வீடு, பரம்பரையின் செல்வசெழிப்பை காட்டியது, தற்போது ஒன்றும் இல்லாவிடினும் கிழவியின் அதிகாரம் ஆணவம் அங்கு கொடிகட்டி பறப்பதை காண கூடியதாக இருந்தது.
மெதுவாக வத்சலாவின் கல்யாண பேச்சை எடுத்தான்: எனக்கு தெரிந்த ஒரு நல்ல புரோக்கர் இருக்கிறார் அவர் வத்சலா அக்காவுக்கு பேசக்கூடிய ...
வசனத்தை முடிக்க முதலே கிழவி அட்டகாசமாக சிரித்து
அறைக்குள்ளேயே இருந்த வத்சலாவுக்கு கேட்குமாறு இஞ்ச உனக்கு இவர் ஒரு புரோக்கரிட்ட கல்யாணம் பேச வந்திருக்கிறார் என்று சத்தம் போட்டு சொன்னாள்.
மிகவும் ஏளனமான குரலில் இதை சொல்கிறார் என்று எனக்கு சத்தியமாக விளங்க வில்லை.
அதே சமயம் எனது தன்னம்பிக்கையை அடியோடு கிழவியின் குரல் சாய்த்து விட்டது,
இனி வத்சலாவை எப்படி பார்ப்பது? அவர் வெளியே வரவில்லையே?
அவரை பார்க்கவேண்டும் என்று கிழவியிடம் எப்படி கேட்பது?
புரோக்கரிடம் பேசும்போது பெண்ணை நான் நேரில் பார்த்தேன் என்றாவது சொல்லவேண்டுமே?
என்னை கிளப்பும் முகமாக கிழவி என்னை பார்வையாலேயே வேறு என்ன அலுவல் என்று கேட்டாள்.
வத்சலாவை பார்க்காமல் கிளம்புவதில்லை என்று எனக்குள் ஒரு எண்ணம் வந்தது,
கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கொஞ்சம் தண்ணி தாருங்கோ என்று கேட்டேன்.
கிழவி வேண்டா வெறுப்பாக பிள்ளை கொஞ்சம் தண்ணி கொண்டுவா என்றாள்.
தண்ணி உடனே வரவில்லை ஆனால் எதோ சத்தம் கேட்டது.
தேநீரோ அல்லது ஏதாவது குளிர்பானமோ தயாராகிறது என்று ஊகித்தேன், ஓஹோ அப்ப வத்சலா கிழவி அளவு மோசமில்லை என்ற முடிவுக்கு வந்தேன்.
கிழவி உள்ளே சென்று வத்சலாவின் கையிலிருந்து கிளாசை பிடுங்கி கொண்டு வந்து தந்தாள். நெல்லி கிரஷ் கொஞ்சம் இனிப்பு தூக்கலாகவே இருந்தது !
வத்சலாவை பார்க்கும் எனது உத்தியை கிழவி முறியடித்து விட்டாள்.
இனி என்ன செய்வது?
நான் இன்னும் இருபதுநாட்கள்  இங்கு இருப்பேன்  என்று  கூறிக்கொண்டே எழுந்து வாசல்வந்தேன்,
கிழவி பார்த்தால் பார்க்கட்டும் என்ற தேனாவட்டுடன் வீட்டு ஜன்னல்களை நோக்கினேன்!
வத்சலா என்னை  பார்த்த வண்ணம் இருப்பதை கண்டேன். என்ன அமைதியான முகம்? வயதின் முதிர்ச்சியையும் தாண்டி கொண்டு முந்தி நிற்கும் அழகுமுகம்.
ஒன்றும் பேசவில்லை ஆனால் அவர் ஏதோ சொல்ல விளைகிறார் என்று தெரிந்தது.
அடுத்த நாள் குமாருக்கு நான் டெலிபோனில் கிழவியின் போக்கு பற்றி நாசுக்காக விளங்க படுத்தினேன்,
கிழவி ஒன்றுக்கும் சம்மதிக்க மாட்டார், இரண்டு மணித்தியால சம்பாஷணைகளின் முடிவில் நான் தெளிவாக சொன்னேன் வத்சலாவுக்கு திருமணம் செய்துவைக்க அம்மா சம்மதிக்கவே மாட்டார்.
அதையே குமாரும் முன்பு அடிக்கடி சொல்வான். ஆனால் நான் நம்புவதில்லை.
வத்சலாவை வெளிநாட்டுக்கு அனுப்புவதை பற்றி குமார் கேட்டான். இது பெரிய பொறுப்பு, முதலில் கிழவி சம்மதிக்காது, அவருக்கு தெரியாமல் செய்யுமாறு குமார் கேட்டான். நானும் என்னால் முடிந்ததை செய்கிறேன் என்று கூறினேன்,
விஷயம் கிழவிக்கு தெரிந்தால் கிழவி என்னை போலீசில் பிடிச்சு குடுத்திடும் என்பதுவும் எனக்கு உறைத்தது. என்னால் மறுக்க முடியவில்லை.
ஒரு நாள் குமார் வத்சலா வீட்டில் தனியே இருப்பதாகவும் அம்மா எங்கோ போய்விட்டார் உடனே வத்சலாவிடம் விஷயத்தை சொல்லி ஒழுங்கு படுத்து மாறு கேட்டு கொண்டான். எனக்கென்னவோ நான் தேவை இல்லாத விடயங்கள் எல்லாம் செய்கிறேனோ என்று பயம் வந்து கொண்டே இருந்தது, எனது வீட்டில் வேறு பல பிரச்சனைகளும் உண்டு. அவற்றை பார்த்து சரிசெய்யவே எனது இலங்கை நாட்கள் உருண்டோடி கொண்டிருக்கையில் இது வேறு ஒரு புயல் என்னை நோக்கி மையம் கொள்வதை என்னால் தவிர்க்க முடியாமல் இருந்தது,
குமாரின் கோரிக்கை மட்டும்தான் காரணம் என்ற கட்டத்தை தாண்டி வத்சலாமீதான எனது அனுதாபமும் தற்போது சேர்ந்து கொண்டது,
நான் குழம்பி கொண்டிருக்கையில் வத்சலாவே எனக்கு போன பண்ணினார். மிகவும் தெளிவாக பேசினார்,
அண்ணா உங்களை பற்றி சொன்னார்.இப்ப உடனேயே வீட்டுக்கு வாங்கோ அம்மா வர இன்னும் இரண்டு மணித்தியாலமாவது ஆகும் என்று சொல்லிவிட்டு டக்கென்று போனை கட்பண்ணி விட்டார்.
உடனே நேரில் சென்றேன்! நான் யோசிக்கு முன்பாக அவரே எல்லாவற்றையும் கிடு கிடு என்று தெளிவாக பேசினார்.
நான் கற்பனை செய்வதிலும் பார்க்க படுவேகமாக புயல் ஒன்று உருவாகி விட்டது. என்னத்தை நான் சொல்வது? எல்லாவற்றையும் அவரே சொன்னார். ஏதோ பலவருஷங்களாக என்னை தெரிந்தவர் போல் பேசினார் தாயாரை பற்றி அக்கு வேறு ஆணி வேறாக கிழித்தார் .
எப்படியாவது கிழவிக்கு தெரியாமல் தனக்கு பாஸ்போர்ட் எடுத்து இந்தியா விசாவும் எடுத்து ரெடியாக்குமாறு ஒரு ஏஜென்சி காரனிடம் பேசுவது போல் பேசினார், என்னால் ஒன்றுமே சொல்லமுடியவில்லை. அவர் என்னை முழுவதுமாக நம்புகிறார்,அதுமட்டும் அல்ல தாயின் கிழச்சில் இருந்து தன்னை நான் எப்படியும்  ரிலீஸ் செய்வேன் என்று உறுதியாக நம்பினார்.
அவரது பேச்சில் இருந்த நம்பிக்கை என்னை அவரது எஜென்சிக்காரனாகவே மாற்றி விட்டது என்றுதான் சொல்லவேண்டும்.
இதுவரை நான் சொன்னதெல்லாம் பழையகதை.
தற்போது நானும் வத்சலாவும் இந்தியாவில் உள்ளோம், வத்சலாவுக்காக ஏற்பாடு செய்த பிரயாண ஒழுங்குகளை குமார் தானே முன்னின்று செய்தார், அவர் தான் வரும்வரை இந்தியாவில் எங்கள் இருவரையும் இருக்குமாறு வேண்டி கொண்டார்.
எனது வீட்டாரோ என்னை திட்டி திட்டி தினம் தினம் போன் பண்ணியவண்ணம் இருந்தனர். நானோ இன்று வருவேன்  நாளை வருவேன் என்று அவர்களை தாஜா பண்ணியபடி இருந்தேன்.
இதற்கிடையில் ஊரில் உள்ள வத்சலாவின் தாயார் என்னைபற்றி இல்லாத பொல்லாத புரளி எல்லாம் கிளப்பி எனது பெயரை மக்சிமம் கெடுத்தாள்.
நாட்கள் மெல்ல மெல்ல ஓடி மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. குமாரின் ஒரு வித்தைகளும் சரிவரவில்லை. வத்சலாவின் விசா விடயங்கள் சரிவருமோ என்று எனக்கு சந்தேகம் வரத்தொடங்கி விட்டது,
வத்சலவுக்கும் தனது அண்ணனின் ஏற்பாடுகளில் அவநம்பிக்கை அரும்ப ஆரம்பித்தது.
அவரை ஒரு மாதிரி  சமாதான படுத்தி குமாரின் விடயங்கள் சரிவராவிடினும் நான் எனது செல்வாக்கை உபயோகபடுத்தி எப்படியாவது அவரை அனுப்பி வைப்பேன் என்று கூறி கொண்டிருந்தேன். வேறு வழி?
நான் மீண்டும் எனது விசா காலாவதியாகும் முன்பே நான் செல்லவேண்டும். தாமதமானால் எனது வேலையும் விசாவும் கோவிந்தா ஆகிவிடும்.
நான் எங்கே தன்னை விட்டு விட்டு சென்று விடுவேனோ என்று வத்சலா பயப்பட தொடங்கி விட்டார்.
அவரால் மீண்டும் ஊருக்கு போக முடியாது. கிழவிக்கு தெரியாமல் தப்பி வந்தததால் கிழவிதான் சாபம் போட்டிருக்க வேண்டும் என்றும் அல்லது அவர் எனது செய்வினை சூனியம் செய்துவிட்டாரோ என்றும் வத்சலா பாதி பகிடியையும் பாதி பயத்திலேயும் அடிக்கடி சொல்லுவார்.
ஒரு நாள் வத்சலா கேட்டார்: இப்படியே என்னால் வேறு நாட்டுக்கு போகவும் முடியாமல் ஊருக்கும் போகமுடியாமல் இருந்தால் என்னசெய்வது?
நான் பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தேன். தெரிந்தால் தானே சொல்வதற்கு?
அவரே தொடர்ந்தார் : உன்னை ப்ளாக் மெயில் செய்கிறேன் என்று நினைக்காதே!
அப்படி ஒன்றும் வராது! எல்லாம் சரி வரும். சும்மா சும்மா மனதை அலட்டி கொள்ள வேண்டாம் என்று சொல்லி வைத்தேன்.
3. ஆறு மாதங்களாகி விட்டன. எனது வேலையும் கோவிந்தா. வத்சலாவின் வெளிநாட்டு கனவும் இன்னும் கனவாக இருக்கிறது. இப்போ நானும் அந்த ரகத்தில் சேர்ந்து விட்டேன்.
நானும் பலவிதமாக எங்காவது  போக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்,
குமார் மாறி மாறி இரண்டு பேரிடம் காசை கொடுத்து ஏமாந்து விட்டார்!
எங்கள் இருவரின் செலவுக்கும் குமார் ஏதாவது வழியில் காசு அனுப்பி கொண்டிருக்கிறார்,
 போதாக்குறைக்கு எனது வீட்டுக்கும் அவர் அடிக்கடி பணம் அனுப்பியுள்ளார்.
ஒரு நாள் எனது காசில் கொஞ்சம் குறைந்து விட்டது, வத்சலா படு பயங்கரமாக கோபித்தார்.
எனக்கும் கோபம் வந்தது பதிலுக்கு என்னை கணக்கு கேட்க நீங்கள் யார் கேட்டேன்?
கிடு கிடு என்று தனது காசு பாஸ்போர்ட் எல்லாவற்றையும் கொண்டு வந்து என்னிடம் தந்துவிட்டு. மூலையில் போய் உட்கார்ந்து விட்டார்.
ஒன்றும் பேசவில்லை.
அவர் இருந்த கோலம் என்னை என்னவோ செய்தது. மன்னிப்பு கேட்டேன்.
அதற்கும் அவர் பதில் சொல்லவில்லை.
ஆனால் எனக்கு புரிந்தது. அவருக்கு என்னை விட்டால் இந்த உலகத்தில் நாதி இல்லை. அதைதான் அவரது செய்கை காட்டியது.
பேசிப்பேசியே கொல்லும் ராசலட்சுமி அம்மாவுக்கு பேசாமலே பேசும் மகள்.

எங்கே போகிறது எனது வாழ்க்கை?
வத்சலாவின் வாழ்க்கை எங்கே போகிறது?
என்னவோ செய்ய தொடங்கி என்னனவோ செய்து கொண்டிருக்கிறேனோ என்று என்னை நானே கேட்டு கொண்டிருக்கிறேன்,
எங்கே தொடங்கி எங்கே முடிக்க?
ஒரு புயல் ஒன்று என்மீதும் வத்சலா மீதும் மையம் கொண்டிருக்கிறது என்பது மட்டும் புரிகிறது.
இந்த புயல் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வருகிறது!
பயப்படுவதா அல்லது பயந்துதான் என்ன பயன்?
எனது அம்மா அப்பா சகோதர்கள் எல்லாரும் வந்து கேள்விகேட்டு புரட்டி எடுப்பதாக ஒரு சினிமா படம் என் மனக்கண் மீது வெற்றி கரமாக ஓடிகொண்டே இருந்தது.
என்னனவோ கணக்குகள் போட்டு வாழ்ந்து வந்த எனக்கு திடீரென இந்த குழப்பம் எல்லாம்?

யாரைகேட்டு இந்த புயல் வருகிறது?
சிலவேளை புயல் நம்மை தாண்டியும் போகலாம், அல்லது நம்மை மூழ்கடித்து விட்டும் போகலாம்.......?

கருத்துகள் இல்லை: